கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நேற்று மாத்திரம் 4,270 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,043 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 854,608 ஆகவும் உயர்ந்துள்ளது.
வைரஸினால் உயிரிழந்தவர்கள் என சீனா அறிவித்த எண்ணிக்கையை விட, அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவற்றிலும் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் வைரஸினால் 854,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,043 பேர் உயிரிழந்தனர். 176,908 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகப்போரின் பின்னரான நெருக்கடி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடி, கொவிட்- 19 வைரஸ் பரவல் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் எதிர்கொள்ளும் தொற்றுநோய் அபாயம் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம், நிலையற்ற தன்மை மற்றும் அமைதியின்மை குறித்து, ஐ.நா செயலாளர் நேற்று வெளியிட்ட விரிவான அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமானில் முதல் மரணம்
கொரோனா வைரஸினால் தனது நாட்டில் முதலாவது மரணம் நிகழ்ந்துள்ளதாக ஓமான் அறிவித்துள்ளது.
ஓமான் சுகாதார அமைச்சர் நேற்று ருவிற்றரில் இதனை தெரிவித்தார். 72 வயதான ஓமானியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நாட்டில் தற்போது 192 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டார் விமான நிலையம் ஊழியர்களை குறைத்தது
கட்டாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக ஊழியர்களின் எண்ணிக்கையை 40% குறைத்துள்ளது. பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் அல்லது வருடாந்திர விடுப்பில் உள்ளார்கள் என கட்டார் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் உணவு மற்றும் பானம், சில்லறை விற்பனை மற்றும் தரை ஊழியர்கள் உள்ளிட்ட 40% ஊழியர்களை தற்காலிகமாகக் குறைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” என்று செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“COVID-19 நெருக்கடியை எதிர்கொள்ள குறுகிய கால நடவடிக்கை. மற்றும் விமான நிலையத்தின் வழியாக பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை” என கூறியுள்ளார்.
அத்துடன் விமான நிலையத்தின் செயற்பாடு 75% இற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் புதிதாக 88 பேர் வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 781 ஆக உயர்ந்தது. இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 62 பேர் குணமடைந்துள்ளனர்.
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/hhqHcSB4Ux
— وزارة الصحة العامة (@MOPHQatar) March 31, 2020
இங்கிலாந்து
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இங்கிலாந்தில் ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் அங்கு 381 பேர் உயிரிழந்தனர்.
ஒரேநாளில் உயிரிழப்பு 27 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்தார்.
இந்த அதிகரித்த இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சியூட்டும், குழப்பமானது” என்று அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். மேலும் இறப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம் இல்லை என்று கூறினார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 381 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 1,789 ஆக உயர்ந்துள்ளது. 3,009 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,150 ஆக உயர்ந்துள்ளது.
13வயது சிறுவன் ஒருவனும் வைரஸால் உயிரிழந்துள்ளான்.
UPDATE on coronavirus (#COVID19) testing in the UK:
As of 9am 31 March, a total of 143,186 people have been tested of which 25,150 tested positive.
As of 5pm on 30 March, of those hospitalised in the UK, 1,789 have sadly died. pic.twitter.com/ctiAd1ty9p
— Department of Health and Social Care (@DHSCgovuk) March 31, 2020
அமெரிக்கா
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பட்டியலில் அமெரிக்கா 3வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 666 பேர் அங்கு உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,897 ஆக உயர்ந்தது. புதிதாக 22,258 பேர் தொற்றிற்கு உள்ளாக, மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 186,046 ஆக உயர்ந்துள்ளது.
நியூயோர்கில் மாத்திரம் 1,550 பேர் உயிரிழந்துள்ளனர். 9,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்தது, நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆபத்தானது” என்று நியூயோர்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் சகோதரரான கிறிஸ் கியூமோவும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். சி.என்.என் தொகுப்பாளராக இருக்கும் கியூமோ, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும், வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் கூறியுள்ளார்.
“சமீபத்திய நாட்களில் எனக்கு காய்ச்சல், குளிர் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தது. பரிசோதித்தபோது கொரோனா தொற்றியிருப்பது தெரிந்து. நான் இதை குழந்தைகளுக்கும் கிறிஸ்டினாவுக்கும் கொடுக்கவில்லை என்று நம்புகிறேன்” என ருவிற்றரில் குறிப்பிட்டுள்ளார்.
— Christopher C. Cuomo (@ChrisCuomo) March 31, 2020
இத்தாலி
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 837 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 12,428 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, தொற்றிற்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்த்தியேற்பட்டு வருகிறது. புதிதாக 4,053 பெர் தொற்றிற்கு இலக்காகினர். 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கொரோனா பரவல் ஆரம்பித்த லோம்பார்டியில் நேற்று 381 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதியின் மொத்த உயிரிழப்பு 7,199 ஆக உயர்ந்துள்ளது என்று தரவுகளை நன்கு அறிந்த ஒரு ஆதாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் திங்களன்று 458 பேர் அங்கு உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின்
நேற்று ஸ்பெயினில் 748 புதிய மரணங்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 8,464 ஆக உயர்ந்துள்ளது. 7,967 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 95,923 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் சீனாவை கடந்து 4ஆவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. நேற்று மாத்திரம் அங்கு 499 பேர் உயிரிழந்தனர். ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,523 ஆக உயர்ந்தது. 7,578 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52,128 ஆக உயர்ந்தது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்தபோது, பிரான்சுக்கு வாரத்திற்கு குறைந்தது 40 மில்லியன் முகக்கவசம் தேவை என்றும், தற்போதைய உள்நாட்டு உற்பத்தி மற்றும் பங்குகள் போதுமானதாக இல்லை என்றும் கூறினார். நாட்டின் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்து, ஏப்ரல் இறுதிக்குள் அவர்கள் வாரத்திற்கு 15 மில்லியன் முகக்கவசம் தயாரிக்க முடியும், என்றார்.
மேலும் வென்டிலேட்டர்களை உருவாக்க பிரான்ஸ் ஒரு கூட்டமைப்பை ஒன்றிணைத்துள்ளது என்றும் மக்ரோன் கூறினார்.
பெல்ஜியம்
ஐரோப்பியாவின் இன்னொரு நாடான பெல்ஜியத்திலும் கொரோனா பெரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டில் ஒரேநாளில் அதிகமானவர்கள் உயிரிழந்த நாள் நேற்றாகும். 192 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 705 ஆக உயர்ந்தது.
876 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காக, தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,775 ஆக உயர்ந்தது.
நெதர்லாந்து
உயிரிழப்பில் ஆயிரம் எண்ணிக்கையை கடந்த நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளது. நேற்று 175 பேர் அங்கு உயிரிழந்தனர். வைரஸ் தொற்றினால் அங்கு அதிகமானவர்கள் ஒரேநாளில் உயிரிழந்தது நேற்றாகும்.
இதுவரை அங்கு 1,039 பெர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் தொற்றிற்குள்ளாக, 12,595 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான்
ஈரானில் நேற்று 141 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,898 ஆக உயர்ந்தது. புதிதாக 3,110 பேர் தொற்றிற்கு இலக்காக, 44,605 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் 74, ஜேர்மனி 130, துருக்கி 46, பிரேசில் 38, அவுஸ்திரேலியா 20 என பல நாடுகளிலும் உயிரிழப்புக்கள் எகிறிச் செல்கிறது.
துனிசியா
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 19 வரை நாட்டை முழுமையாக முடக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
துனிசியாவில் 362 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக நாடு முடுக்கப்பட்ட நிலையில், முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதியோப்பியா
எதியோப்பியாவில் பொதுத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விடுத்த அறிவிப்பில், கொரோனா தொற்று தணிந்ததும் புதிய திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.