சிரியாவிலுள்ள இலக்கு மீது இஸ்ரேல் வான்படை நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சிரியா அறிவித்துள்ளது. தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு, இஸ்ரேலிய ஏவுகணைகளை நடு வானில் அழித்ததாக சிரிய அரசு ஊடகமான சனா செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகளை லெபனான் வான்வெளியில் இருந்து இஸ்ரேலிய விமானப்படை ஏவியதாகவும், சிரிய வான்பரப்பில் வைத்து அவை அழிக்கப்பட்டதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.
சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.
ஈரானிய படைகள் நிலை கொண்டிருந்த இராணுவ விமான நிலையம்தான் இலக்கு என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளரான சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2011 ல் சிரிய மோதல் தொடங்கியதில் இருந்து, சிரிய அரசாங்கத்தை குறிவைத்தும், அங்கு நிலை கொண்டுள்ள ஈரானிய படைகள் மற்றும் லெபனான் போராளிக் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.