கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை தயாரித்துள்ளதாக ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் சோதனை கருவியை அபோட் அறிமுகப்படுத்தி உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.5 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய அரசாங்கமும் கொரோனா வைரசிற்கான தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தனது தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்டில் தடுப்பூசி தயாரிக்கும் திட்டமும் சோதனையில் உள்ளது. ரஷ்யா தனது தடுப்பூசியை விலங்குகள் மீது பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் அமெரிக்க நிறுவனமான ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனமும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம், பயோமெடிக்கல் அட்வான்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் அத்தோரிட்டி (BARDA) உடன் இணைந்து, ஜனவரி 2020 முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த கொடிய வைரசை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவனம் ஒரு தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. சோதனை முடிந்தவுடன்,100 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் கூறி உள்ளது.
“உலகம் ஒரு அவசர பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் கொரோனா தடுப்பூசி உலகளவில் சீக்கிரம் கிடைக்கக்கூடியதாகவும், மலிவு விலையிலும் கிடைக்க எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று நிறுவன அதிகாரிகளை ஐரிஷ் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
மேலும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபோட் லேபரேட்டரீஸ் விரைவான சோதனையைத் தொடங்குவதற்கான தனது திட்டம் குறித்து அறிவித்துள்ளது
கொரோனா வைரஸை கண்டறியும் சோதனை கருவியொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தமது கருவி மூலம் சோதனை முடிவு 5 நிமிடங்களில் இருந்து 13 நிமிடங்களில் தெரியவரும் என்றும் என்று அபோட் கூறியுள்ளது.