அமெரிக்க யுத்த கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரை காப்பாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கப்பலின் தளபதி பிரெட் கிரெஜைர் கடிதம் ஒன்றின் மூலம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் என சர்வதேச ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த கப்பலில் சுமார் 4000 இளம் ஆண்களும் பெண்களும் இருப்பதாகவும் போர்க்கப்பலில் வைரஸ் தொடர்ந்து பரவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அனாவசியமான ஆபத்தை உருவாக்கும் எனவும் எம்மை இதிலிருந்து மீட்காமல் இருப்பதானது கடற்படையினரின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தற்போது நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை, ஆகவே மாலுமிகள் மரணிக்க வேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள அவர், எங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக மாலுமிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் இதிலிருந்து மீட்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை அவசியம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அணுவாயுத விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றி இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாக தோன்றலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இது உடனடியாக எடுக்கப்படவேண்டிய அவசியமான ஆபத்தான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறான நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாலுமிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் கப்பல் கூடிய விரைவில் மீண்டும் இயங்குவதை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.