கொரோனா நோயாளிகளால் அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப் அனுப்பி வைத்த கப்பல் மருத்துவமனை நோயாளிகளை ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் 1,000 படுக்கை வசதி கொண்ட அந்த கப்பல் மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் பயன்படுத்தப்படாமலும், அங்குள்ள 1,200 மருத்துவ ஊழியர்கள் இந்த ஆபத்தான வேளையிலும் நேரத்தை வீணாக போக்கி வருகின்றனர்.
நியூயார்க் நகரம் கொரோனா பரவலால் சீரழிந்து வருகிறது. மொத்தம் 93,053 மக்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 2,538 பேர் மரணமடைந்துள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் மொத்தம் நிரம்பியுள்ள நிலையில், பலர் மருத்துவரை காண காத்திருக்கும் நிலையிலேயே மரணமடைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நியூயார்க் நகர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அமெரிக்க கடற்படை மருத்துவமனை கப்பல்களில் ஒன்றான U.S.N.S. Comfort அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனாதிபதி டிரம்ப் நேரிடையாக சென்று குறித்த கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்துள்ள நிலையில், குறித்த கப்பல் கொரோனா நோயாளிகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
திங்களன்று நியூயார்க் நகரை அடைந்த குறித்த கப்பலானது இதுவரை வெறும் 20 கொரோனா நோயாளிகளை மட்டுமே அனுமதித்துள்ளது.
இதனிடையே இராணுவ நெறிமுறைகள் மற்றும் அதிகாரத்துவ இடையூறுகளின் சிக்கல் காரணமாகவே U.S.N.S. Comfort பல நோயாளிகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான வேளையில் உதவ மறுப்பது, உண்மையில் இந்த கப்பலை அனுப்பியதன் நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.