கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திலும், நெருக்கடியிலும் பிரித்தானியா எப்படி சமாளித்து வருகிறது என்ற பெருமையை மகாராணியார் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் தற்போது வரை 4,313 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த வைரஸின் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பிரித்தானிய மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில், அரிதிலும் அரிதாக பிரித்தானிய ராணியார் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்துள்ளதாகவும், வின்ட்சர் கோட்டையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ராணியார் நாளை(ஞாயிற்று கிழமை) உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் பேசும் இந்த உரை முன்னரே பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அன்றைய தினம் ஒளிப்பரப்பாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நாளை ராணியார் பேசவுள்ள உரையாடல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.
அதில், அவர், இந்த சவாலான நேரத்தில் எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் பேசுகிறேன். நம் நாட்டின் வாழ்க்கையில் இடையூறு விளைவிக்கும் காலம் இது, சிலருக்கு வருத்தம், பலருக்கு நிதி சிக்கல்கள் மற்றும் நம் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள்.
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற போராடி வரும், NHS-ல் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், நாட்டின் வயதானவர்களைக் கவனிக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
இந்த சவாலான நேரத்தில் பிரித்தானியா எப்படி எதிர்கொள்கிறது? எப்படி பதில் அளித்தது? என்பதை பெருமையாக கூறுவார்.
தங்களுக்குப் பின் வரும் இந்த தலைமுறையின் பிரித்தானியர்கள் எவ்வளவோ வலிமையானவர்கள் என்று கூறுவார். சுய ஒழுக்கத்தின் பண்புகள் பற்றி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா எதிர்கொள்ளும் துக்கம், வலி மற்றும் நிதி சிரமங்களை அவர் ஒப்புக்கொள்வதுடன், நாட்டில் தனிநபர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ராணியாரின் இந்த உரையின் போது கடுமையான சமூகவிலகல்கள் பின்பற்றப்பட்டதால், ஒளிபரப்பை படமாக்க ஒரு கேமரா ஆபரேட்டர் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் ஆபரேட்டர் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியிருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ராணியார் அவரது 68 ஆண்டு கால ஆட்சியில் ஐந்தாவது முறையாக உரையாற்றுகிறார். இதற்கு முன்னர் 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின் துவக்கத்திலும், 1997-இல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாகவும், 2002-ஆம் ஆண்டில் ராணி அம்மாவின் மரணத்திற்குப் பிறகு மற்றும் 2012-ல் தனது வைர விழாவின் போது என்பது குறிப்பிடத்தக்கது.