உக்ரைனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களிலே உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Ivano-Frankivsk நகரை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க Galina என்ற கர்ப்பிணி பெண் கடந்த மார்ச் மாதம் 10-ஆம் திகதி கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு அறிகுறியும் இல்லாத போது, அங்கிருக்கும் மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் அனுமதிக்கப்பட்ட 19 நாட்களில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் Volodymyr Chemny செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மார்ச் 29-ஆம் திகதி அன்று பெண்ணின் நிலை திடீரென மோசமடைந்தது.
அவளுடைய இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. அவரது உடல் வெப்பநிலை திடீரென்று 39 டிகிரி செல்சியஸ் [102.2 பாரன்ஹீட்]-ஆக உயர்ந்தது.
இதன் காரணமாக, அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில், நேர்மறை முடிவுகள் வந்தன.
இதைத் தொடர்ந்து அன்று மாலை அவருக்கு ஆரோக்கியமான(2.5கிலோ உடல் எடை) பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரின் உடல்நிலை மோசமாகியதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பெண்ணின் உறவினர் Stasevich என்ற பெண் கூறுகையில், அவள் இறந்து கொண்டிருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவளுடைய வார்டுக்குள் நுழைந்து அவளிடம் விடைபெற அவர்கள் எங்களை அனுமதித்தார்கள்.
ஆனால், அவள் தனது குழந்தையைப் பெற்றெடுத்த சில மணிநேரங்களில் இறந்துவிட்டாள். இவளின் மரணத்திற்கு இங்கிருக்கும் உழியர்கள் தான் காரணம் என்று கூறிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் அவர் ஒன்றாக தங்க வைக்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்னிடம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஊழியர்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தியதாக என்னிடம் கூறினார். இங்கு எந்தவிதமான பாதுகாப்பு கருவிகளும் இல்லை. ஒரு மருத்துவர் கூட முகமூடி கூட அணியவில்லை.
மருத்துவமனையில் தான் Galina-வுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது 100 சதவீதம் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார். .’
Galina குறிப்பிட்ட மையத்தில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு மருத்துவர்கள் தொற்றுநோயைப் பிடித்ததாக அங்கிருக்கும் நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் ஒரு உள்ளூர் மருத்துவர் ஒருவரும், சில நாட்களுக்கு முன்பு வைரஸுக்கு நேர்மறையான முடிவுகளை பெற்றதாக தகவல்கள் உள்ளன.
இதற்கிடையில் Galina-வுக்கு பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று முடிவு வந்துள்ளதால், குழந்தை மருத்துவர்களின் தீவிரகண்காணிப்பில் உள்ளதாகவும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அங்கிருக்கும் தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.