உக்ரைன் விமானத்தை வீழ்த்தியதின் மூலம் ஈரானிய இராணுவம் சிறப்பாக செயல்பட்டது என்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் சட்ட மற்றும் நீதித்துறை குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் நோரூஸி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8 ஆம் திகதி உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணித்த 176 பேர் கொல்லப்பட்டனர்
தொழில்நுட்ப தோல்வி காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறி வந்த ஈரான், பின்னர் தங்கள் வீரர்கள் தற்செயலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், ஈரான் இராணுவம் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்தன என்று சட்டமன்ற உறுப்பினர் ஹசன் நோரூஸி தெரிவித்துள்ளார்.
விமானத்தின் நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது, விமானம் கண்காணிப்புகோபுரத்தின் கட்டுப்பாட்டில் இல்லை, அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியதாக தோன்றியது என்று நோரூஸி கூறினார்.
மேலும், விமானம் ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேலில் இருந்தது, மேலும் அது சேதமடைந்தது.
விமானம் ஈரானில் சிறப்பு இலக்குகளை குறிவைத்தது என்று அவர் கூறினார். எனினும், இலக்குகள் என்ன என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை.
விமானம் மற்ற நாடுகளால் கட்டுப்படுத்தப்படுவதால், எங்கள் இராணுவப் படைகள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தன.
இந்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வது அர்த்தமற்றது, இச்சம்பவம் தொடர்பில் தற்போது வரை ஈரானில் யாரும் கைதுசெய்யப்படவில்லை,யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என நோரூஸி வலியுறுத்தினார்.
மனித பிழையின் விளைவாக விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் வலியுறுத்துகிறது. இருப்பினும், விமானம் ஐ.ஆர்.ஜி.சி யால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று நோரூஸியின் கருத்துக்கள் கூறுகின்றன.