திருகோணமலை – சம்பூர் பகுதியில் இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பூர் – சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிரோஜன் லுஷாந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
கணவர் உயிரிழந்ததை அடுத்து அவரது அக்காவின் வீட்டில் குறித்த பெண் வாழ்ந்து வந்த நிலையில் , அக்காவும் அவரது கணவரும் கடைக்குச் சென்றபோது அக்காவின் எட்டு வயது மகன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அக்காவின் மகனிடம் கடைக்கு சென்று வருமாறு தற்கொலை செய்துகொண்ட பெண் கூறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் தாய் மற்றும் தந்தை வருகை தந்து பார்த்தபோது, தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூறுல்லாஹ் பார்வையிட்டதுடன் , பிரேத பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.