கொரோனா விவகாரத்தில் சீனா சில விஷயங்களை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அது குறித்து சீனா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் காணப்பட்ட இந்த கொரோனா வைரஸால் இப்போது உலகமே கதிகலங்கி நிற்கிறது. பல்வேறு நாடுகளில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா விவகாரத்தை பொறுத்தவரை சீனா தகவல்களை மூடி மறைப்பதாகவும், அதன் மூலம் இன்று உலக நாடுகள் அனைத்தையும் இன்னலில் மாட்டி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரை அனைத்தையும் விளக்க அறிக்கையாக சீனா வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பா் கடைசியில் சீனாவின் வுஹான் நகர நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கொரோனா வைரஸை முதல் முறையாக கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் அவசரமாக அறிக்கை அனுப்பியது.
அதன் பின், அடுத்த நாளே, கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், முககவசம் அணியும்படியும் வுஹான் நகராட்சி ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.
இதன் பின் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் விளக்கப்பட்டாலும், வுஹானில் உள்ள ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்து அந்த நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டத் தொடங்கியது என்பது தொடா்பாக எந்தவொரு தகவலும் இல்லை.
அதேபோல், அந்த நோய்த் தொற்றை முதலில் கண்டறிந்து அது தொடர்பாக சமூக ஊடங்களில் எச்சரிக்கை செய்து, பின்னா் அந்த நோய்த் தொற்றுக்கு பலியான மருத்துவா் லி வென்லியாங் குறித்தும் எதையும் சீனா அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில், 2 மாத கடுமையான கட்டுப்பாடுகளால் நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், ஹூபெய் மாகாணத்தில் தினசரி ஒருசிலர் இறப்பது வாடிக்கையாக இருந்தது.
இதையடுத்து முதல் முறையாக அங்கு நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. உள்நாட்டை சேர்ந்த யாருக்கும் புதிதாக நோய் தொற்றும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.