ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றி முழு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று, இந்நாட்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் 2,196-ஐ மட்டுமே தொட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிடும் போது மற்ற இதே அளவு பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
ஜேர்மனி அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் அந்தளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை முதல் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, அரசு எல்லைக் கட்டுப்பாடுகளை(பயண கட்டுப்பாடுகள்) விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் யாரை அதிகம் பாதிக்கிறது? யார் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற தகவலை பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
- ஜேர்மன் குடிமக்கள் எல்லா நேரங்களிலும் ஜேர்மனிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிநாட்டினர் உட்பட ஜேர்மன் அல்லாத குடிமக்கள் சில நிபந்தனைகளின் கீழ் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்துறை அமைச்சகத்தின் படி, இருக்கும் நிபந்தனைகள்(நுழைய அனுமதிக்கப்படுபவர்கள்)
- ஜேர்மனியில் வீடு அல்லது சட்டப்பூர்வ குடியிருப்புக்குத் திரும்பும் நபர்கள்.
- பயணிகள், இராஜதந்திரிகள், வேலை நோக்கங்களுக்காக அல்லது தொழில்முறை ஒப்பந்த சேவைகளை மேற்கொள்வது போன்றவைகள்.
- மருத்துவ சிகிச்சை போன்ற நுழைவு தேவைப்படும் அவசர காரணங்கள் உடையவர்கள்.
- வேறு எந்த பயண இணைப்பும் சாத்தியமில்லை என்றால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்ப ஜேர்மனி வழியாக செல்பவர்கள்
சுற்றுலா நோக்கங்களுக்காக ஜேர்மனியில் நுழைவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியரல்லாத குடிமக்கள் எந்தவொரு அத்தியாவசிய பயணங்களும் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முயற்சித்தால், மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.