குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் இந்த நிதியம் தொண்டாற்றி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘தமிழன்’ படத்தில் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் மிகப்பிரபலமான கதாநாயகிகள் பட்டியலில் சுமார் பத்தாண்டுகளாக நீடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதுடன் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குவான்டிக்கோ’ நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்குகிறார்.
கலையுலகில் மட்டுமில்லாமல் சமூகச் சேவையிலும் ஆர்வம்காட்டி வரும் பிரியங்கா சோப்ரா கடந்த பத்தாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உருவாக்கப்பட்ட 70-வது ஆண்டுவிழா நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது, பிரியங்கா சோப்ராவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்ட தகவலை பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் மற்றும் 12 வயது பிரிட்டன் நடிகை மில்லி பாபி பிரவுன் ஆகியோர் வெளியிட்டனர்.
இவர்களுடன் நடிகர்கள் ஆர்லந்தோ புளூம், ஜாக்கிசான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
‘இந்த நியமனத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரியங்கா சோப்ரா, ‘யூனிசெப் அமைப்புடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள பல கிராமங்களுக்கு நான் சென்றுள்ளேன். அந்த பயணங்களின்போது, ஏராளமான இளம்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து கலந்துறவாடி இருக்கிறேன்.
சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி தருவதன்மூலம் இளம்பெண்களுக்கு உரிமையான அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பதை நான் நேரடியாக கண்டறிந்தேன். ஏற்கனவே இந்த அமைப்பின் நல்லெண்ண தூதர்களாக இருந்துவரும் நண்பர்களுடன் நானும் இணைந்துள்ளதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்’ என பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டார்.