விதிகளை மீறும் வெளிநாட்டினரை தாயகம் அழைத்து செல்லாத பிற நாடுகள் மீது கடுமையான விசா தடை விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. 5லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,747பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக மக்கள் உயிரிழந்த பட்டியலில் அமெரிக்க இரண்டாவது இடத்தில் உள்ளது.
தொடக்கத்திலேயே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், சமூக பரவலாக கொரோனா மாறியுள்ளது. எனவே தற்போது பாதிப்பை குறைக்க அமெரிக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் வெளியில் நடமாட முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது புதிய மற்றொரு அறிவிப்பை அதிபர் டொனால் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஆனால், இது வெளிநாட்டினருக்கு மட்டும் பொருந்தும்.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில், வெளிநாட்டினரை திரும்ப அழைக்காமல் இருக்கும் நாடு மற்றும், காரணமில்லாமல் தாமதமாக அழைத்துக் கொள்ளும் நாடுகள் மீது விசா தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.
அதில், பிற நாட்டை சேர்ந்த மக்கள் பலர் அமெரிக்காவில் விதிமுறைகளை மீறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லாத நாடுகள் மற்றும் தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்புபவர்களை அழைக்காமல் இருக்கும் நாடுகள் மீது விசா தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும், அது டிசம்பர் 31ஆம் திகதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விதிமுறைகளை மீறுபவர்களை அவர்கள், நாட்டிற்கே திருப்பி அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். இன்னும் 7 நாட்களுக்குள் நாடுகளின் பட்டியல் பாதுகாப்புதுறைச் செயலருக்கு அனுப்பப்படும் என்றும் பட்டியல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு சுகாதார இடர்பாடுகள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.