பிரித்தானியாவில் கொரோனா தொற்றிற்கு சுமார் 18 மாதங்களில் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் வரை சாதாரண வாழ்க்கை வாழ முடியாதென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் அறிகுறிகள் இருந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய மற்றும் ஏழு நாட்களும் வீட்டில் இருப்பதற்கான ஆலோசனைகள் அடுத்த ஆண்டும் தொடரலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் கடை மூடல் போன்ற நடவடிக்கைகளை மேலும் சில வாரங்களுக்கு மாத்திரம் நீடிக்க அமைச்சர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் இதற்காக ஒரு உரிய தடுப்பூசி அல்லது மருந்தினை கண்டுபிடிக்கும் வரையில் இயல்பு வாழ்க்கையை வாழ நினைக்காமல் புதிய வாழ்க்கையை சமாளிக்க வேண்டும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியானது காலவரையறையின்றி நீடிக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நடவடிக்கைகளை பிரித்தானியா எவ்வளவு காலம் சமாளிக்க முடியும் என்பது குறித்து அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், நீண்ட காலத்திற்கு, தன்னார்வ அடிப்படையில் சமூக இடைவெளிகளை ஊக்குவிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்டங்களும் விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லொக்டவுன்களை முழுமையாக தளர்த்துவதென்பது தற்போது மிக விரைவான தீர்மானமாக இருக்காது. எனவே இந்த நடவடிக்கை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என பிரித்தானிய வெளிவிவகார துறை செயலாளர் Dominic Raab தெரிவித்துள்ளார்.