காதல் சந்திப்புகள் இனிமையானவை. முதன்முதலாக காதலரை சந்திக்கும்போது மனதில் இனம்புரியாத பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அந்த இனிமையான நேரம் சொதப்பலாக அமைந்துவிடக்கூடாது. காதலருடனான சந்திப்பு திகட்டும் வகையில் இனிதாய் அமைய சில யோசனைகள்…
காதலுக்காக காத்துக்கிடந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பார்க்காமலே காதல் வர இன்டர்நெட் பெரிதும் துணைநிற்கிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற வலைத்தளங்களில் நண்பராகும் நபர் காதலராகும் வாய்ப்புகள் பெருகிவிட்டன. காதலை ஊக்குவிக்கும் செயலிகள் (அப்ளிகேசன்கள்) கூட நிறைய இருக்கின்றன. உங்கள் காதலர் இணையதளம் மூலம் பிடித்தவராகவோ, இதயம் கவர்ந்ததால் ஏற்றுக் கொண்டவராகவோ இருக்கட்டும். காதலை சொல்லப் போவதனாலும், காதலரை கைப்பிடிக்க தயாரானாலும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு காலெடுத்து வையுங்கள்!
‘ஆன்லைன்’ காதலர் என்றால் அழைப்பு வந்தவுடன் சந்தித்துவிட வேண்டாம். முதலில் போனில் அல்லது ஸ்கைப்பில் ‘சாட்’ செய்து அறிமுகமாகிக் கொள்ளுங்கள். இணைய தகவல் தொடர்பைவிட, முகம் பார்த்து பேசும் தகவல்களும், குரல் உணர்த்தும் உண்மைகளும் நம்பிக்கையை அதிகப் படுத்தும். அவரைப்பற்றி அதிக புரிதலை ஏற்படுத்தும். புரிதலில் தெளிவு ஏற்பட்டால், அவருடன் பழகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என நம்பினால் நேரில் சந்திக்கும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை சந்திக்கும் நிகழ்வு நிச்சயமாகிவிட்டால் இடத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள். அதிகம் அறிமுகமாகாதவராகவோ, நம்பிக்கைக் குறைவாகவோ இருந்தால் பொது இடத்தில் சந்தித்துப் பேசுங்கள். நம்பிக்கையானவர் என்றால் அவருக்கோ, உங்களுக்கோ பரீட்சயமான இடமாக இல்லாமல் புதிய இடமாக தேர்ந்தெடுத்தால் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உணவு உள்ளிட்ட விஷயங்களை தேர்வு செய்வது, பகிர்வது, விட்டுக் கொடுத்தல் போன்றவற்றில் இருவரது எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பதை புதிய இடங்களில் எளிதாக அளவிட்டுவிடலாம். இது புரிதலையும், பிணைப்பையும் அதிகமாக்கும்.
வழக்கமான காபி ஷாப் சந்திப்பைவிட, அமைதியான, அழகான ஒரு இடத்தை தேர்வு செய்யலாம். சாப்பிடும், கொறிக்கும் இடங்களில் சந்திப்பதால் செலவும், கவனச்சிதறலும் ஏற்படலாம். அமைதி நிறைந்த இடம் மனதை வருடி சந்திப்பை இனிமையாக்கும். புரிதலையும் சாத்தியமாக்கும்.
பொழுதுபோக்கு மையங்களில் சந்திப்பு இருந்தால் நிச்சயம் உற்சாகம் ததும்பும். நேர்மறையான எண்ணங்கள் அலைமோதும். இதனால் காதல் உணர்வுகள் அதிகரித்து உங்கள் எண்ணம் நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம்.
சந்திக்க வந்துவிட்டால் அடிக்கடி கடிகாரத்தையும், செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். காதலரை கவனியுங்கள். அவர் சொல்வதையும், செய்வதையும் புரிய தயாராக இருங்கள். அதிக எதிர்பார்ப்புடன் சென்று ஏமாற்றத்தை சந்திக்க வேண்டாம். பதற்றமாக இருந்து சந்திப்பை சொதப்பிக் கொள்ளாதீர்கள். இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்காமல் இயல்பாக இருந்து நடப்பதை ரசியுங்கள். வருவதை எதிர்கொள்ளுங்கள்.
புரிதலுக்கான நோக்கத்துடன் சென்றால் எந்த விஷயத்தைப் பற்றியும் நீங்கள் பேசலாம். காதலனாக தேர்வு செய்யும் நோக்கத்துடன் சென்றால் பழக்க வழக்கம் சம்பந்தமாக மென்மையாக பேசலாம். நிதி, செக்ஸ், மாமனார்-மாமியார் என கண்டவற்றையும் நோண்டிக் கேட்டு பேசிக் கொண்டிருக்க வேண்டாம். திருமணம் உறுதியாகும் சமயத்தில் இவை பற்றிய கருத்துகளை பகிரலாம்.
ஆர்வமாக கேட்கிறார் என்பதற்காக ஆன்மிகம், மதம், அரசியல் என எந்த விஷயத்தையும் அடியாழம் வரை பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எதையாவது பேச வேண்டுமே என்ற கட்டாயத்திலும் பேச வேண்டாம். எதற்கும் மெனக்கெடாமல் இயல்பாக பேசுங்கள். இடைவெளியில் உணவருந்தலாம், ஸ்னாக்ஸ் சாப்பிடலாம். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்காமல் உங்கள் மீதான அவரின் கவனத்தை ரசிக்கவும்.
முதல் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது என்பதால் இயல்பான சந்திப்பாக கருதிக் கொண்டு பேசுங்கள். எல்லாவற்றையும் இன்றே முடிவு செய்துவிட வேண்டும் என்பதுபோல பரபரப்பு வேண்டாம். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டு காதலை உறுதி செய்யலாம்.
முதல் சந்திப்பின் சிறப்பு என்னவென்றால் காதலர் மீதான புரிதலுக்குத்தானே தவிர, ஜோடி சேர்ந்துவிட அல்ல. அவர் மீது ஆர்வமும், நம்பிக்கையும் பெருக்கெடுக்காவிட்டால் விலகிப்போய்விடவும் முதல் சந்திப்பு வாய்ப்பாக அமையும். ஒருவேளை அவர் ஒத்துவரமாட்டார் என்றால் மென்மையான அணுகுமுறையுடன் விலகுவது முக்கியம். உங்கள் சந்திப்பு இனிமையாகட்டும்!