கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் மூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான தினக்கூலிகள் வறுமையில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடுத்தர வணிகத்தினர், தொழிலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முகமாக கூகுள் நிறுவனம் சார்பாக சுமார் 5 கோடி ரூபாயை தன்னார்வ அமைப்பான கிவ் இந்தியாவுக்கு (Give India) அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கிவ் இந்தியா தனது ட்விட்டர் பக்கதில், ”மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள தினக் கூலிகளுக்கு உதவிய கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வறுமையில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ, இந்தியா முழுவதிலிருந்து இதுவரை சுமார் 12 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என கிவ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.