கொரோனாவால் வேலையின்றித் தவிப்போர் குறித்த பல உண்மைச் சம்பவங்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
பிரித்தானியாவில் தான் வழக்கமாக Waitrose, Marks and Spencer ஆகிய பிரபல பல்பொருள் அங்காடிகளில் மளிகைப் பொருட்கள் வாங்குபவர் என்று கூறும் ஒரு பெண், இன்று தான் ஒரு ஏழையாகிவிட்டதாக கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
நல்ல வேலையிலிருந்த ஒரு பெண், கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையிழந்துள்ள நிலையில், இருந்த பணத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டு கையில் வெறும் 30 பவுண்டுகள் மட்டுமே இருப்பதால், ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் உணவு வங்கிகளை நம்பி வாழ்வதாகத் தெரிவிக்கிறார்.
பெயர் வெளியிட விரும்பாமல் தன்னை ஆலிஸ் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த பெண், முதலில் பசியை அலட்சியப்படுத்தி பாட்டுக் கேட்டுக்கொண்டே இரண்டு வேளை மட்டுமே ஏதோ இருப்பதை சாப்பிட்டு வாழ முயன்றிருக்கிறார்.
ஆனால், பசியை சமாளிக்க முடியாமல் இலவச உணவு வழங்கும் இடங்களைத் தேடிப்போகவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டிருகிறது.
பார்க்க நன்றாக உடையணிந்திருக்கும் ஒரு பெண் ஏன் இலவச உணவு வாங்க வருகிறார் என்று தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் கேட்டுவிடுவார்களோ என்று முதலில் பயந்துகொண்டே உணவு வாங்கச் சென்றிருக்கிறார் அவர்.
ஆனால், அதைவிட தன் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தான் ஏழ்மை நிலையில் வாழ்வதும், இலவச உணவு வாங்கி உண்டு வாழ்வதும் தெரிந்துவிடுமோ என்று அஞ்சியிருப்பதாக தெரிவிக்கிறார் ஆலிஸ்!