லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 80,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் தலைநகரான லண்டனில் கொரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை நினைத்ததை விட அதிமாகி வருகிறது.
இது, அந்நாட்டின் பொது சுகாதாரத்துறைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், கொரோனாவுக்கு பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வேனில் டிரைவர்கள் எடுத்துச்செல்லும்போது மருத்துவ பிரேத பரிசோதனை அறைகளில் அவர்களுக்கு இதுவரை பிளாஸ்டிக் பிணப் பைகள் வழங்கப்பட்டு வந்தன.
இதில் உடலை மூட்டைபோல் எளிதில் கட்டி விடலாம். ஆனால், இப்போது இந்த பைகளுக்கு தற்போது நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் காரணமாக இதுவரை உடலை மூடி எடுத்துச்செல்ல வசதியாக 2 பிளாஸ்டிக் படுக்கை விரிப்புகள் கொடுத்து வந்த நிலையில், தற்போது அது ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
இது ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள், தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ? என்ற அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் இப்படி தான் வருகிறது என்று, இறந்தவரின் உடலை காட்டியுள்ளார்.
இது வேடிக்கை இல்லை, லண்டனில் இருக்கும் பல மருத்துவமனைகளில் இதுதான் நிலைமை, எங்கும் பிணப் பைகள் இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இது குறித்து லண்டனில் அடக்கஸ்தலங்களை நிர்வகிக்கும் உயிரிழந்தோருக்கான மேலாண்மை ஆலோசனைக் குழு, பிணங்களை அகற்றுவதற்கு ஒரு சாதாரண படுக்கை விரிப்பை மட்டுமே ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கொடுப்பது மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும்.
கொரோனா இன்னும் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாகவும் அமைந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அந்நாட்டின் பொது சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.