பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட நிலையில், முதலாவது கைது தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்றிருந்ததோடு நேற்றைய தினம் இடம்பெற்ற கைதும் சித்திரைப் புத்தாண்டில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக அவரது நண்பர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசித்த போது காவலில் இருந்த பொலிஸார் அவரிடம் ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்படும் அனுமதிப் பத்திரத்தை கோரியிருக்கின்றனர்.
அந்த நபரிடம் பொலிஸ் அனுமதிப் பத்திரம் இல்லாததன் காரணமாக அவரைத் திருப்பியனுப்ப பொலிஸார் முயற்சித்தனர். இதன்போது வீட்டிலிருந்து வெளியே நுழைவாயிலுக்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் தலைமையகத்தில் இதுபற்றி முறையிட்ட நிலையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹானை குற்றத்தடுப்பு பிரிவில் அவர் நேற்றைய தினம் இரவு காவல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் நுகேகொடை – கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.