கொரோனா வைரஸின் தாக்கம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் மருத்துவர் கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
அத்துடன் மேலும் மூவர் குணமடைந்து வெளியேறியுள்ளதோடு, இதற்கமைய இதுவரை 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இலக்கான வெளிநாட்டவர் ஒருவர் உள்ளிட்ட 152 பேர் நாட்டிலுள்ள மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பை நடத்திய வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்தினார்.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் பொது மக்கள் தமக்குத் தேவையான அத்தியவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆங்காங்கே சில வர்த்தக நிலையங்களும் மருந்தகங்களும் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரம் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.