சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சிலர் இணைந்து தாக்கியதுடன் தலைமறைவாகியும் இருந்தனர்.
இந்நிலையில் கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தலைமைறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை நேற்றைய தினம் கைது செய்ததுடன் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள தனது பிரிவு மக்களுக்கு வழங்கும் கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வேளையில் சில நபர்கள் கூட்டமாக வந்து உத்தியோகத்தரிடம் தங்களுக்கும் கொடுப்பனவு வழங்குமாறு கேட்டு அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியுள்ளனர் இதன் போது குறித்த உத்தியோகத்தர் அந்நபர்களின் கேள்விகளுக்கான பதிலை வழங்கி விட்டு திரும்பும் போது குறித்த நபர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்டு சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இருவர் பாழடைந்த மண்டபம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் பொலிஸார் கைது செய்ததுடன் கைதானவர்கள் கல்முனை பகுதியை சேர்ந்த 30, 45 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.