கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அதிகமானோர் பேருவளை பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை அதிகப்படியான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களாக கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அம்மாவட்டங்களில் தலா 45 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் களுத்துறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 45 தொற்றாளர்களில் 35 பேர் பேருவளை சுகாதார அத்தியட்சர் அலுவலகத்தின் அதிகார எல்லைக்குள் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் பேருவளையின் 5 கிராமங்கள் ஏற்கனவே தொற்றாளர்கள் காரணமாக முடக்கப்பட்டு இலகு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அதில் இரு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டு கடும் நடைமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பேருவளையின் சீனன் கோட்டை மற்றும் பன்வில ஆகிய பகுதிகளே முற்றாக முடக்கப்பட்டு, ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.
குறித்த இரு கிராமங்களும் முற்றாக இராணுவ பாதுகாப்பின் கீழ் உள்ளதாகவும், அங்கு அடுத்து வரும் நாட்களில் எவரும் உள் நுழைய, வெளிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘ கடந்த இரு நாட்களாக கண்டறியப்பட்ட தொற்றாளர்கள், மட்டக்களப்பு புனாணை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தே கண்டறியப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பேருவளையின் இவ்விரு ஊர்களையும் சேர்ந்தவர்களாவர். அவர்களுடன் பழக்கத்தில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நாம் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றோம்.
எனினும் 2 ஆம் 3 ஆம் அடுக்கு தொடர்பாடல் பின்னணியில் தப்பித் தவறியேனும் எவரும் அந்த ஊர்களுக்குள் இருந்தால் அது ஆபத்தாக அமையலாம்.
எனவே தான் அவ்விரு ஊர்களையும் கடுமையான நடைமுறைகளின் கீழ் கொண்டுவந்து தனிமைப்படுத்தியுள்ளோம்.’ என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.
இந் நிலையில் கடந்த 17 நட்களாக முற்றாக களுத்துறை மாவட்டத்தின், பண்டாரகம பொலிஸ் பிரிவின் அட்டுலுகம கிராமமும் இன்று முற்றாக முடக்கல் விதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அந்த கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட போதும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 20 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று அவர்களுக்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதன் பின்னணியிலேயே அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று யாழ் – தாவடி பகுதியில் முடக்கப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவும் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே இன்று அட்டுலுகமவும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை – சீனன் கோட்டை, பன்வில, கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை – போரத்தொட்டை, ஜா எல பகுதியின் சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை, நீர் கொழும்பு – கட்டான – அக்கர பனஹ பகுதியின் கந்தசூரிந்துகம, குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல,
கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானையின் ஸ்ரீ ஜனநானந்த மாவத்தை ஆகிய பகுதிகளும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ – மாலிதுவ பகுதியும் தொடர்ந்தும் முடக்க நிலையிலேயே உள்ளன.
கடந்த வாரம் பகுதியளவில் முடக்கப்பட்ட மன்னார் – தாராபுரம் பகுதி இன்று முதல் மீள சாதாரண ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.