உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரொனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 2,407 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
1930 களில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமான நிலைமைக்கு பின்னர், தற்போது மீண்டும் அதேபோன்ற நிலைமை உருவாகலாமென சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் உலகப் பொருளாதாரம் 3 சதவீதம் சுருங்குமென எச்சரித்துள்ளது.
ரஷ்யாவில் நேற்று அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துவிட்டது.
இதேவேளை, கொரோனா வைரஸினால் 15,000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நான்காவது நாடாக பிரான்ஸ் பதிவாகியது. சுவீடனின் உயிரிழப்பு 1,000 ஐ கடந்துள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, உலகம் முழுவதிலும் 1,997,620 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். 126,596 பேர் உயிரிழந்துள்ளனர். 478,425 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 6,978 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா
கொரோனாவினால் ஒரேநாளில் அதிகம் பேர் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள் பதிவாகியது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2,407 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 26,047 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 26,945 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 613,886 ஆக உயர்ந்துள்ளது.
வோஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையக பணியாளர் ஒருவரும் வைரஷினால் உயிரிழந்துள்ளார். அமெரிக்க வெளியுவுத்துறையில் பணியாற்றியவர்களில் 5வது நபரின் உயிரிழப்பு இதுவாகும். அவரது பெயர் விபரங்களை வெளியிட முடியாது என மருத்துவ சேவை பணியகத்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி வில்லியம் வால்டர்ஸ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கெதிரான கூட்டு நடவடிக்கைக்காக ஜி 7 நாடுகளின் தலைவர்களின் வீடியோ கென்பிரன்ஸ் மாநாட்டை, அமெரிக்க ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த ஆண்டு ஜி 7 இன் தலைவராக இருக்கும் டிரம்ப், குழுவின் வருடாந்த உச்சிமாநாட்டை இரத்து செய்ய வேண்டியிருந்தது.
ஜி 7 அமைப்பிலுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய அனைத்து நாடுகளும் கொரொனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன்
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 778 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 12,107 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5,252 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக, 93,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ்
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 762 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 15,729 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 143,303 பேர் பாதிக்கப்பட்டனர்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து 15,000 இற்கும் அதிக உயரிழப்பு பதிவான நான்காவது நாடானது பிரான்ஸ். நேற்று உயரிழப்பில் அதிகரிப்பு தென்பட்டபோதும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இத்தாலி
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 602 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 21,067 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2,972 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதுவரை 162,488 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
ஸ்பெயின்
கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயினில் 499 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 18,255 ஆக உயர்ந்தது. புதிதாக 3,961 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 174,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனி
கடந்த 24 மணித்தியாலத்தில் 301 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 3,495 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,138 பேர் தொற்றிற்கு இலக்காக, தொற்றிற்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 132,210 ஆக உயர்ந்தது.
பெல்ஜியம்
நேற்று 254 உயிரிழப்புக்கள் பெல்ஜியத்தில் பதிவாகியது. மொத்த உயிரிழப்பு 4,157 ஆக உயர்ந்தது. புதிதாக 530 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 31,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேஸில்
பிரேஸிலில் 204 உயிரிழப்புக்கள் பதிவாக, மொத்த உயிரிழப்பு 1,532 ஆக உயர்ந்தது. புதிதாக 1,832 பேர் தொற்றிற்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,262 ஆக உயர்ந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ மாகாண ஆளுநர் வில்சன் விட்செல் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
அவர் ருவிற்றரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சமீபத்திய நாட்களில் காய்ச்சல் மற்றும் தொண்டை புண்ணால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததையடுத்து, அவர் பரிசோதனை மேற்கொண்டார். நேற்று செவ்வாய்க்கிழமை, அவர் தொற்றிற்குள்ளானது உறுதியானது என தெரிவித்தார்.
ஈரானில் நேற்று 98 பேர் உயிரிழந்தனர். அங்கு இதுவரை 4,683 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. சுவீடனில் 114 உயிரிழப்புக்கள் பதிவாக, மொத்த உயிரிழப்பு 1,033 ஆக உயர்ந்தது.
கனடாவில் 123 உயிரிழப்புக்கள் பதிவாக, மொத்த உயிரிழப்பு 903 ஆக உயர்ந்துள்ளது. நெதர்லாந்தில் 122 பேர் உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 2,945 ஆக உயர்ந்தது.
ஒஸ்திரியா
கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியா நேற்று முதல் பல வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதித்தது. லொக் டவுனை ஓரளவு தளர்த்தியுள்ளது. சுமார் ஒரு மாதத்தின் முன்னர் பாடசாலைகள், பார்கள், தியேட்டர்கள், உணவகங்கள், அத்தியாவசியமற்ற கடைகள் உள்ளிட்டவற்றை மூடி, மக்களை வீட்டிலேயே தங்கியிருந்து பணியாற்ற அரசாங்கம் அறிவித்தது.
கொரோனாவிற்கு எதிராக அந்த நாடு சிறப்பாக செயற்பட்டு வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள் திண்டாடி வரும் நிலையில், ஒஸ்திரியாவில் 384 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
உகண்டா
லொக் டவுனை இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பதாக ஜனாதிபதி யோவரி முசவேனி அறிவித்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் மே 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
♦லொக் டவுன் காலப்பகுதியில் பொதுமக்கள் வாகனத்தை செலுத்துகிறார்களா என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணிக்கும் செயலியை வெளியிடவுள்ளதாக ஆப்பிள் இன்க் தெரிவித்துள்ளது.