வாசனை மற்றும் சுவை ஆகிய உணர்வுகள் திடீரென குறைவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஒவ்வாமை மற்றும் மூக்கு தொடர்பான நோய்களுக்கான சர்வதேச மன்றம், சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு குறித்து, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், துணை கட்டுரையாளருமான கேரோல் யான் கூறியதாவது:
கொரோனா வைரசை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாசனை மற்றும் சுவை ஆகிய உணர்வுகள் சுத்தமாக இல்லாமல் போனால், பெரும்பாலும், அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம்.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவில், கடந்த மாதம், 3 முதல் 29 வரை 1,480 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 102 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் பெரும்பாலானவர்கள், வாசனை மற்றும் சுவையை உணர முடியவில்லை என தெரிவித்தனர். தொற்று நீங்கிய ஒரு மாதத்திற்கு பின், சம்பந்தப்பட்ட நபருக்கு இந்த உணர்வுகள் மீண்டும் வந்துவிடும் என்றார்.