சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைத்தள பக்கத்தில் கொலை மிரட்டல் விடுத்த மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை Aargau மண்டல பொலிசார் அந்த 58 வயது மருத்துவரின் குடியிருப்பில் புகுந்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவர் தொடர்பில் தெளிவான அறிக்கை பெறும் வகையில் அவரை மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு குறித்த மருத்துவர் தமது ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக பக்கங்களில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பலமுறை விமர்சித்து வந்துள்ளார்.
மட்டுமின்றி 5G மற்றும் கொரோனாவுக்கு நேரடி தொடர்பிருப்பதாகவும் அவர் நீண்ட கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் பண்டிக்கைக்கும் இரண்டு தினங்களுக்கு முன்னர், 5G அலைக்கற்றைகளால் பல மில்லியன் மக்கள் கொல்லப்படுவது உறுதி எனவும், இது ஈஸ்டர் நாளில் நடந்தே தீரும் எனவும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பிலும், அதன் விசாரணை குறித்தும் தமது கடுமையான விமர்சனங்களை குறித்த மருத்துவர் முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சிரியா போர் தொடர்பில் பலரது கவனத்தை ஈர்த்த சிறுவனின் புகைப்படம் போலி என வாதிட்டு இவர் வெளியிட்ட கருத்துகள் சர்வதேச அளவில் கண்டனத்தையும் சம்பாதித்தது.
தொடர்ந்து இவர் மன்னிப்பும் கோரியிருந்தார். தற்போது குறித்த மருத்துவரின் கைது நடவடிக்கை உண்மையில் பாராட்டத்தக்கது என சுவிஸ் மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.