எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் (14), வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர்.
எனது சகோதரரர் அநீதியாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், பழிவாங்கலுக்கு எதிராகவும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகின்றோம்’ என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சகோதரரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நானோ, எனது குடும்பத்தினரோ அல்லது சகோதரர் ரியாஜ் பதியுதீனோ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாதவர்கள் என்பதை, மிகவும் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் நாங்கள் உதவமாட்டோம். அனுமதிக்கவும்மாட்டோம். அதற்கெதிராக அனைத்துக் கட்டங்களிலும் செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டு வருகின்றோம்.
ஆனால், இந்தப் பயங்கரவாதச் சம்பவத்துடன் எனது சகோதரரை தொடர்புபடுத்தி, இவ்வாறானதொரு அநியாயச் செயலை செய்திருப்பது, எனது அரசியல் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியே காரணமாகும் எனவும், அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் நம்புகின்றேன்.
பாதுகாப்புத் தரப்பினர் நடத்துகின்ற விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவது எமது கடமை என்ற வகையில், சகோதரர் ரியாஜ் பதியுதீனும் பூரண ஒத்துழைப்பை இந்த விசாரணைக்கு வழங்குவார்.
ஆனால், அவரது விசாரணை தொடங்கி, அது நிறைவடைவதற்கு முன்னரே, மறுகணத்திலிருந்தே “இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்புடையவர்” என்ற பொய்யான செய்தியை நாடு முழுவதும் இனவாத ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினத்தில், அடுத்த நிமிடத்திலிருந்தே “ரிஷாட் பதியுதீன் இந்தச் செயலுடன் தொடர்புற்றிருக்கிறார்” என அபாண்டங்களைப் பரப்பினர்.
எமது அரசியல் கருத்துக்கு மாறாக இருந்தவர்கள், கடந்த காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்தினால், ஒருசில அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக இந்த சம்பவத்துடன் என்னை தொடர்புபடுத்தி மோசமாகப் பேசினர். பிழையான பிரசாரங்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்தனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், பொலிஸ் மா அதிபர் மூன்று விசாரணைக் குழுக்களை அப்போது அமைத்ததுடன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலம், ரிஷாட் பதியுதீனுக்கு இதில் சம்பந்தம் இருந்தாலோ அல்லது இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்பான தகவல்கள் இருந்தாலோ பொலிஸில் வந்து முறையிடுமாறு, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் செய்தி பரப்பினார்கள். அதற்கான கால அவகாசமும் கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
என்மீதான இந்த விசாரணைக்கென மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், வழங்கப்பட்ட அத்தனை தகவல்களும் ஆவணங்களும் பொலிஸ் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் முடிவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலோ, வேறு எந்த பயங்கரவாதத்துடனோ ரிஷாட் பதியுதீனுக்கு எதுவித தொடர்புமில்லை என பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிவித்தனர்.
தற்போதிருக்கும் பதில் பொலிஸ்மா அதிபரே, இந்த விசாரணை அறிக்கையை எழுத்து மூலம் அப்போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வழங்கினார். இந்த விடயங்கள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன், எனது சகோதரரோ, எனது குடும்பத்தினரோ இந்த பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கமாட்டார்கள் என, நான் உறுதியுடன் மீண்டும் கூற விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.