பிரித்தானிய செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்க, அதே நோய்த்தொற்றால் அவரது தாயார் மரணமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜில் உள்ள ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் செவிலியர் ஜெனிஃபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரது தாயார் அனுசுயா சந்திர மோகன் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தற்போது செவிலியர் ஜெனிஃபர் குணமடைந்து தமது தாயாரின் இறுதிச்சடங்குகளை நேரிடையாக காணும் பொருட்டு,
குறித்த சடங்குகளை தாமதப்படுத்துவதற்கான செலவுகளுக்காக, ஜெனிஃபரின் நண்பர்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர்.
ஜெனிஃபர் கிங்ஸ் லினில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் டென்வர் வார்டில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா காரணமாக அனுசுயா சந்திர மோகனின் திடீர் மறைவும், ஜெனிஃபரின் மோசமான நிலையும் இந்தியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள அவர்களது உறவினர்களை உலுக்கியுள்ளது.
கொரோனாவில் மரணமடைந்தவர்களின் சடலங்களை நான்கு வாரத்திற்கு இறுதிச்சடங்குகளுக்கு கையளிப்பதில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
மரணமடைந்துள்ள அனுசூயாவுக்கு உரிய இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள தற்போது ஜெனிஃபரின் நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 861 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13, 729 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுக்க கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 103, 093 என பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,617 அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் 6-வது இடத்தில் பிரித்தானியா உள்ளது.