கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு இத்தாலியில் இன்று நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 4.3 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது எமிலியா-ரோமக்னா பிராந்தியங்களை தாக்கியுள்ளது.
இது நாட்டில் கொரோனா பரவலுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கோலி பகுதிக்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
ஜெனோவா நகருக்கு வடகிழக்கில் சுமார் 46 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அங்குள்ள பலர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறினர்.
இருப்பினும் இதுவரை, காயங்கள் அல்லது கடுமையான சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
உள்ளூர் நேரப்படி பகல் 11.42 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கமானது மிலன் நகரிலும், லொம்பார்டி பிராந்தியத்திலும், சுவிட்சர்லாந்தின் எல்லையோர பகுதியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் ஊரடங்கு இன்னும் தளர்த்தப்படாத நிலையில், பலரும் சமீபத்திய அறிகுறிகளை சுட்டிக்காட்டி 2020 மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இத்தாலியில் எமிலியா-ரோமக்னா மற்றும் லோம்பார்டி ஆகிய இரு பகுதிகளும் கொரோனா தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் 22,000 க்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளது.
லோம்பார்டி பிராந்தியத்தில் 11,400 பேரும், எமிலியா-ரோமக்னாவில் 2,800 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 168,941. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 525 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.