எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊரியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச இயந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் யார் என தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானியிடம் வழங்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுபவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கயை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.