உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் நீடித்துவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில், நோய் தொற்று குணமாவதில் நோய் எதிர்ப்புச் சக்தியின் பங்கு பேசுபொருளாகி இருக்கிறது.
சாதாரண சளி, காய்ச்சல் முதல், நிமோனியா காய்ச்சல் வரை உண்டாக்கும் ஒவ்வொரு வைரசும் சீசன் கால வைரஸாகவே இருந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தக்கூடிய வைரஸாக மாறி இருக்கிறது.
வைரஸ் தொற்றின்போது ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமாகப் பிரித்து மனிதர்களிடம் ஆய்வு செய்தனர்.
முதல் ஆய்வில் 18 பேரைத் தேர்வு செய்தனர். 1977, 78-ல் உள்ள ஒரு தொற்று அவர்களுக்குச் செலுத்தப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு இவர்களுக்கு மீண்டும் தொற்று உண்டாக்கியபோது அவர்களில் 6 பேர் பாதிக்கப்படவில்லை. 12 பேருக்குப் பாதிப்பு குறைந்த அளவிலிருந்தது.
மேலும், 1990-ல் 15 பேரிடம் ஒரு கொரோனா வைரசை செலுத்திச் சோதிக்கப்பட்டது. 10 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரு ஆண்டு கழித்து மீண்டும் அவர்களுக்குத் தொற்று உண்டாக்கப்பட்டபோது, குறைந்த அளவு பாதிப்புக்குள்ளானார்கள். இவர்களுக்கு முதல் முறை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தது தெரியவந்தது.
இந்த ஆய்வு முடிவுகளை மற்ற தொற்றுகளுடன் பொருத்திப்பார்க்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சார்சும், மெர்சும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை.
சார்ஸ் 2002-2003 லும், மெர்ஸ் 2012-லும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்கள். இந்த வைரஸ்களை கொண்டு இதுபோன்ற நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.
ஆனால், முந்தைய ஆய்வு மாதிரிகளை ஒப்பிடும்போது, மனிதர்களின் ரத்தத்தில் தொற்று உருவாகும் போது ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தபட்சம் சில காலங்கள் நீடிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்
இதேபோலவே கோவிட்19 பாதிப்புக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள், கொரோனா பாதிப்பு மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தபட்சம் ஓராண்டு வரை நீடிக்கலாம் என்கிறார்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தி தனிமனிதர்களிடம் வலுவாகும் அதேநேரம், ஒரு சமூகமாக ஒரு கூட்டமாக நோய் எதிர்ப்புச் சக்தி பெறும்போது தொற்றுகளின் பாதிப்பு குறையும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.