8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மகோகனி மரத்தின் ஒரு பாகத்தை கனடாவின் தொல்லியல்துறை கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான மரமாக இது தான் எனவும் அறிவித்துள்ளனர்.
வெப்பமண்டல காடுகளில் அதிகம் இருக்கும் மரங்களாக கூறப்படுவை மகோகனி வகை மரங்கள். சுமார் 200 அடிக்கும் மேலாக நேராக வளரக்கூடிய இந்த மரம் பல கோடி ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுவது உண்டு. இவ்வகை மரங்களால் செய்யப்படும் மரச்சாமான்கள், இசைக்கருவிகளுக்கு தனி மதிப்பு உண்டு.
மேலும், டைனோசர்ஸ் காலத்தில் வாழ்ந்த மரமாக கருதப்படும் மகோகனி மரத்தின் ஒரு பாகத்தை கனட நாட்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வான்கவர் தீவுகளில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின் போது பாறைகளுக்கு நடுவே இந்த மரத்தின் புதைபடிவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, மரத்தின் புதைப்படிவத்தை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் பழம் மற்றும் விதைகளின் சதைப்பற்றுள்ள அடுக்குகளின் படி இது 72 முதல் 79 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கூறியுள்ளனர். அதாவது சுமாராக 8 கோடி ஆண்டுகள் பழமையான மரம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரம் டைனோசர்ஸ் வாழ்ந்த காலத்தில் உள்ள மரமாக இந்த மகோகனி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.