கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அபாய வலயம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் குறிப்பிட்டளவு நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்ப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 20 க்குப் பின்னர் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பித்து, நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் பகுதியாக, ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்க பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததாகவும் அந்த சந்திப்பில் தானும் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமரை சந்தித்த பிரதிநிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
எனவே சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு உட்பட்டு கொரோனா அதிகம் பாதிக்கப்படாத மாவட்டங்களில் அவர்கள் வேலையை மீள ஆரம்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு கொழும்பு, கமபஹா போன்ற அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.