ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்காவில் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், மே மாதம் 14 ஆம் திகதி புதிய நடாளுமன்றம் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் மே மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தினத்தில் தேர்தலை நடத்துவதில் எந்தவித சிரமங்களும் ஏற்படாது என்று அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையிலேயே நாடளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டின் இலக்கம் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 இன் 3 ஆவதை மேற்கோள் காட்டி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் என்ன நிகழலாம் அல்லது நடக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் நிலுவையில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.