ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண் ஒருவர் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை சிலுவை வடிவில் ஏற்றி அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜேர்மனியில் தற்போது வரை ஒரு லட்சத்து 40-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் நாட்டில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், இது தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் மோசமான நாளாக அமைந்தது.
இந்நிலையில் ஜேர்மனியின் Zella-Mehlist-ல் இருக்கும் தன்னுடைய வீட்டில், வரி ஆலோசகரான Gertrud Schop என்ற பெண், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மெழுகுவர்த்திகளை சிலை வடிவத்தில் ஏற்றினார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்வதற்காக இப்படி நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றியதாகவும், கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைக்கும் வரை தான் இதை தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதை அவர் 60 வயதான தன்னார்வலர்கள் பலரின் உதவியுடன் செய்ய முடிந்ததாகவும், இதற்காக ஏழு மணி நேரம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், நோய்த்தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது என்று நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.