எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையால் படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு 34 வயது பெண்தான் கொரோனா வைரஸை முதன்முதலாக கண்டுபிடித்தார் என்றால் நம்பமுடிகிறதா? ஸ்காட்லாந்தின் எளிய குடும்பம் ஒன்றை சேர்ந்தவர் June Hart.
படிக்க வசதியில்லாததால் ஆய்வகம் ஒன்றில் டெக்னீஷியனாக பணிக்கு சேர்ந்தார் June. பின்னர் கணவர் Enriques Almeidaஉடன் கனடாவுக்கு குடிபெயர்ந்து ரொரன்றோவிலுள்ள புற்றுநோய் ஆய்வகம் ஒன்றில் எலக்ட்ரான் நுண்ணோக்கிகளை பயன்படுத்தும் ஒரு வேலை கிடைத்தது June Almeidaவுக்கு.
அதற்குமுன் பார்த்திராத பல வைரஸ்களை எலக்ட்ரன் நுண்ணோக்கியின் உதவியால் கண்டு அவற்றைக் குறித்து பல கட்டுரைகளை எழுதிவைத்தார் June Almeida.
ஆனால், அதற்குமுன் யாரும் வைரஸ்களின் படங்களை வெளியிட்டிராததால் வைரஸ்களை கண்டுபிடிப்பது எப்படி என்பது அவருக்கு பெரிய சவாலாக இருந்தது.
அப்போது வைரஸ்களுக்கெதிரான ஆன்டிபாடிகளை முன்பு நோய் தாக்கியவர்களின் உடலிலிருந்து எடுத்து அவற்றை இரத்த மாதிரிகளுடன் கலந்து, அதற்குப்பின் அவற்றை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் படம் பிடிக்க, அந்த ஆன்டிபாடிகள் வைரஸ்களை சுற்றி வளைத்துக்கொண்டதால், இதுதான் வைரஸ் என்பதைக் கண்டறிய முடிந்தது.
ரூபெல்லா வைரஸ் உட்பட பல வைரஸ்களை அடையாளம் கண்டறிந்தார் June Almeida. அதற்கு முன்பே அறிவியலாளர்களுக்கு ரூபெல்லா குறித்து தெரியும் என்றாலும், June Almeidaதான் அதை முதன்முதலில் தன் நுண்ணோக்கி உதவியுடன் பார்த்தவர் ஆவார்.
அவரது புகழ் பரவ ஆரம்பிக்க, லண்டன் திரும்பிய June Almeidaவிடம் பிரபல மருத்துவரான Dr. David Tyrrell ப்ளூ போன்ற ஒரு நோயை உண்டுபண்ணும் புதிய வைரஸ் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக சர்ரேயிலுள்ள ஒரு மாணவனிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை அனுப்பியிருந்தார்.
பல்வேறு முயற்சிகளில் அந்த வைரஸை கண்டுபிடிக்கமுடியாத நிலையில், Dr. David Tyrrell Almeidaவின் எலக்ட்ரான் தொழில் நுட்பம் ஏதாவது உதவலாம் என்ற சிறு நம்பிக்கையில் அந்த மாதிரிகளை அனுப்பியிருந்தார்.
ஆனால் அவரது எண்ணத்தை தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருந்தது Almeidaவின் கண்டுபிடிப்புகள்.
மிகச்சரியாக அந்த வைரஸின் உருவத்தைக் கண்டறிந்து அதன் படத்தையும் வரைந்த Almeidaவுக்கு, தான் முன்பு இதேபோன்ற வைரஸ்களை பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது.
அவர் அந்த வைரஸ்கள் குறித்து எழுதியிருந்த ஆய்வுக்கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இப்போது அவரும், Tyrrellம், மற்றும் சில ஆய்வாளர்களும் தங்கள் கண்டுபிடிப்பு குறித்து விவாதிக்க கூடினார்கள்.
கிரீடம் போன்று அந்த வைரஸ் காணப்பட்டதால், கிரீடத்துக்கான லத்தீன் வார்த்தையான corona என்ற பெயரே அவர்கள் புதிதாக கண்டுபிடித்த வைரஸுக்கு வைக்கப்பட்டது. இப்படித்தான் 1964ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற விடயம் பிறந்தது!