இலங்கையில் 19 மாவட்டங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் திறக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் TRANSIT விமானங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேவேளை முடக்கப்படடுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் 19 மாவட்டங்கள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்படும் நிலைமைக்கு அமைய இது தீர்மானிக்கப்பட உள்ளது.
இதனிடையே அரச ஊழியர்களின் கடமைகளை பகுதிப் பகுதியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொழும்பு உட்பட அவதானத்திற்குரிய மாவட்டங்களில் உள்ள அரச அலுவலங்களுக்கு தினமும் ஒரு பகுதி ஊழியர்களை மாத்திரம் வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் அரச அலுவலங்களில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீதமுள்ள நான்கு நாட்களும் வீடுகளில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும்.
அடுத்த நாள் அரச அலுவலங்களுக்கு வந்து கடமையாற்றும் ஊழியர்கள் அடுத்த நான்கு தினங்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்விதமாக ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்கள் தினமும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.