உத்தரபிரதேச மாநிலத்தில் கிருமிநாசினியை குடிக்க வைத்து துப்புரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களை தாக்குபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டபோதிலும், அங்கு சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்தநிலையில் அங்குள்ள ராம்பூர் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அங்குள்ள மோதிபுரா கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த 14-ந் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் துப்புரவு தொழிலாளியான குன்வார்பால் ஈடுபட்டுள்ளார். அவர் எந்திரம் மூலம் கிருமி நாசினி திரவத்தை தெளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த இந்திரபால் என்பவரின் காலில் மருந்து பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்திரபால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து எந்திரத்தை பறித்து, அதில் இருந்த குழாயை குன்வார் பால் வாயில் திணித்து கட்டாயப்படுத்தி கிருமிநாசினி திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். இதையடுத்து மொராதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குன்வார் பால், 3 நாள் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 17-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து குன்வார் பாலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் இந்திரபால் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.