கோவிட்-19 (கொரொனா) வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் ஏற்பட்ட உயரிழப்பு 40,000 ஐ கடந்து விட்டது. இதில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர், நியூயோர்க்கில் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 2,404,820 பேர் வைரஸ் தாக்கத்திற்க உள்ளாகியுள்ளனர். 164,922 பேர் உயிரிழந்துள்ளனர். 624,848 பேர் குணமடைந்தனர்.
ஈரான் அதன் தலைநகரான தெஹ்ரான் மற்றும் கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் களஞ்சியங்கள் உள்ளிட்ட “குறைந்த ஆபத்துள்ள வணிகங்களை” ஓரளவு மீண்டும் திறந்துள்ளது. ஆனால் அல்ஜீரியா, மொராக்கோ, குரோஷியா மற்றும் ஸ்பெயின் லொக் டவுனை நீட்டித்துள்ளன. அதே நேரத்தில் உஸ்பெகிஸ்தான் சமூக தொலைதூர நடவடிக்கைகளை நீடித்தது.
நேற்று 4,875 பேர் உயரிழந்தனர்.
அமெரிக்கா
கடந்த 24 மணித்தியாலத்தில் 1,510 பேர் உயிரிழந்தனர். நேற்றும் இன்றும் அமெரிக்க உயிரிழப்பில் வீழ்ச்சி தென்படுவது அந்த நாட்டிற்கு சாதகமான அறிகுறியே. இதுவரை 40,424 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 24,787 பேர் தொற்றிற்கு உள்ளாகினர். 763,579 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா
நேற்று 596 பேர் அங்கு உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்தது. புதிதாக 5,850 பேர் தொற்றிற்குள்ளாக, 120,067 பேர் இதுவரை தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இத்தாலி
கடந்த 24 மணித்தியாலத்தில் 433 மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 23,660 ஆக உயர்ந்தது. புதிதாக 3,047 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 178,972 பேர் தொற்றிற்கிலக்காகியுள்ளனர்.
ஸ்பெயின்
கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயினில் 410 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 20,453 ஆனது. புதிதாக 4,258 பேர் தொற்றிற்கிலக்கானார்கள். இதுவரை 198,674 பேர் தொற்றிற்கிலக்காகியுள்ளனர்.
பிரான்ஸ்
பிரான்ஸின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றமாக உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக குறைந்து வருகிறது. நேற்று 395 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 19,718 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,101 பேர் தொற்றிற்கிலக்கானார்கள். இதுவரை 152,894 பேர் தொற்றிற்கிலக்கானார்கள்.
மார்ச் 30ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் மூத்தோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களை சந்திக்கும் உறவினர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி பிரான்ஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது. முக்கியமாக, அவர்களை தொட்டுப் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று 127 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 2,017 ஆக உயர்ந்தது. நேற்று பிரேசில் 101, பெல்ஜியம் 230, மெக்சிக்கோ 104 உயரிழப்புக்கள் பதிவாகின.
கனடா
கனடாவில் நேற்று 117 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 1,587 ஆக உயர்ந்தது. புதிதாக 1,673 பேர் தொற்றிற்கிலக்கானார்கள். இதுவரை, 35,056 பேர் தொற்றிற்கிலக்காகியுள்ளனர். நேற்று தொற்றிற்கிலக்கானவர்கள் எண்ணிக்கை 12 வீதம் அதிகரித்திருந்ததாக கனடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குரோஷியா
குரோஷியாவின் லொக்டவுன் ஓரளவு தடைநீக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் டேவர் போசினோவிக் நோவா நேற்று இதனை அறிவித்தார்.
இன்று திங்கள்கிழமை முதல் மக்கள் தங்கள் மாவட்டங்களுக்குள் சுதந்திரமாக பயணிக்க முடியும். இதற்காக குரோஷியா 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், குரோஷியாவின் எல்லைகள் மூடப்பட்டிருக்கும்.
சிம்பாவே
ஜிம்பாப்வேயின் லொக் டவுன் நீடிக்குமென ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா தெரிவித்தார். நாட்டின் லொக்டவுனை நீக்க, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரையறைகளை நாடு இதுவரை பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார்.
நாட்டில் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இந்த புள்ளி விபரம் அதிகமாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய தொழிற்துறையான சுரங்க நிறுவனங்களை மீள இயங்க அரசாங்கம் அனுமதிக்த்துள்ளது. எனினும், குறைந்தளவான தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.