தமிழகத்தில் பணம் மற்றும் உணவு இல்லாத மன விரக்தியில் திருவண்ணாமலை தீபமலை மீது தியானம் செய்துகொண்டிருந்த ரஷ்ய நாட்டுத் தம்பதியை ட்ரோன் கமெரா உதவியோடு பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் வீரியமடைந்துகொண்டே செல்வதால், இதைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு மே 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த ட்ரோன் கமெராக்களை பறக்கவிட்டுக் கண்காணித்து வருகிறது காவல்துறை.
இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த விக்டர் மற்றும் டாடியானா தம்பதியினர் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆன்மீக தலங்களையும் சுற்றிப் பார்த்த இவர்கள், அரசின் ஊரடங்கு அறிவிப்பால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் எதிரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதி தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்ல இயலவில்லை என்பதாலும் உணவிற்காகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், மன விரக்தி ஏற்பட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது ஏறி தியானம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது ஊரடங்கை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்த பொலிசார் இருவர் மலையில் நடமாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மலை மீது ஏறிய பொலிசார் 3 மணி நேரத்தில் அவர்களை கீழே இறக்கினர். மலையில் ஆகாரமின்றி அழுது கொண்டிருந்த ரஷ்ய தம்பதிக்கு உண்ண உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அளித்தனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், 144 ஊரடங்கு முடிந்து போக்குவரத்து சீரான பிறகு திருவண்ணாமலை காவல்துறையின் மூலம் அவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும், அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளனர்.