புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் அனைத்தும் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், மாகாண உயர் நீதிமன்றம், வணிக உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை நீதவான் நீதிமன்றத்தின் செயல்பாடுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்த சந்தேக நபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் பத்தொன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த பொலிஸ் பிரிவு ஆபாய வலயமாக அறிவிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேன் முறையீட்டு நீதிமன்றம் நாளை (21) கூடாது என்பதுடன் மேன்முறையீட்டுக்கு ஆஜரான சட்டத்தரணிகள் நாளை மறுநாள் பதிவாளர் மூலம் பெறலாம்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தையும் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது
திணைக்களத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வராத அந்த பகுதிகளில் நீதித்துறை நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்து நீதிச் சேவை ஆணைக்குழு நேற்று (19) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த சுற்றறிக்கையின்படி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் நெரிசலைக் குறைக்கவும், தேவைப்படும் போது மட்டுமே பயனாளிகளை உள்ளீர்த்தல், முகமூடி அணிவதை கட்டாயமாக்கல், உடல் வெப்பநிலையை சரிபார்த்தல், அறிகுறிகளுடன் நீதிமன்றத்திற்குள் ஆட்கள் நுழைவதைத் தடுத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.