அரசாங்கம் மருத்துவ சங்கத்தின் அறிவுரையை உதாசீனம் செய்வது ஆபத்தானது எனவே மருத்துவ சங்கத்தின் ஆலோசனைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தெடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இலங்கையிலும் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர். இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை முழுவதுமாக ஆராய்ந்து உணர்த்தும் கடமை முழுக்க முழுக்க மருத்துவத் துறைக்கே உரியது. அத்தகைய மருத்துவ சங்கத்தின் அறிவுரையை மீறி ஊரடங்கைத் தளர்த்துவது மிகப்பெரும் ஆபத்தாகும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் மக்கள் அலை அலையாக தங்கள் தேவைகளை நிறைவேற்ற வெளியில் வருவது தவிர்க்க முடியாததாகும். தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் வெளியில் வந்தே ஆக வேண்டும். அதனை விடுத்து தேவைகளை நிறைவு செய்ய இந்த நாட்டில் மாற்று வழியில்லை.
இதற்கு மாற்றீடாக கனடா போன்ற நாடுகளில் நடைபெறுவதுபோன்று மக்களை வீடுகளில் இருக்கச் சொல்லி அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று வழங்குவது.
இது இந்த நாட்டில் சாத்தியப்படாத ஒன்று. காரணம் வீடுவீடாகச் சென்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற கிராம அலுவலர்கள் எந்தவிதமான பாதுகாப்பு அங்கீகளுமின்றி தமது பணியைச் செய்வதனை நாம் கண்டிருக்கின்றோம்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.
உதாரணமாக அரசாங்க ஊழியர்கள் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடனை இந்த இடர்க்காலங்களில் செலுத்தத்தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் சில வங்கிகள் அரச ஊழியர்களிடம் கடனை முழுவதுமாக அறவீடு செய்துள்ளன.
இதே வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் வெளியில் வந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.
காரணம் அக்குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியில் செல்லமுடியாத நிலை.
இவை எல்லாம் மிகவும் அபாயகரமானது.
இதனையே கருத்தில் கொண்டு மருத்துவ சங்கம் அரசாங்கத்திற்கு ஊரடங்கை நீக்கவேண்டாம் என ஆலோசனை வழங்கியது.
அதனை உதாசீனம் செய்து வேறு காரணங்களுக்காக அரசாங்கம் ஊரடங்கை நீக்கியிருப்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அதுமட்டுமன்றி வரப்போகும் ஆபத்தினை முழுக்க முழக்க சந்திக்கும் ஆற்றல் மருத்துவத்துறைக்கு மட்டுமே உள்ளது.
ஆகையால் இந்நாட்டின் மக்களையும், மதிப்பு மிக்க மருத்துவர்களையும், அத்துறைசார்ந்த ஊழியர்களையும் கருத்தில் கொண்டு மருத்துவ சங்கத்தின் ஆலோசனைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்றுள்ளது .