மின்சாரம் இல்லாமல் இயங்கக் கூடிய வென்டிலேட்டர்களை பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஆனால், சிகிச்சைக்கு தேவையான கருவிகள், நோய் கண்டறியும் சாதனங்கள் போதுமானதாக இல்லை. இதனால் கரோனா நோய் கண்டறிதலும், சிகிச்சையும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த டைனமிக் டெக் என்ற நிறுவனம் மிகக் குறைந்த விலையில் வென்டிலேட்டர் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன் விலை ரூ.2,500 மட்டுமே. உலக அளவில் இது மிகக் குறைந்த விலை கொண்ட வென்டிலேட்டர் எனக் கூறப்படுகிறது. இது மின்சாரம் இல்லாமலேயே இயங்கும்.
நெருக்கடி காலத்தில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது இருப்பதால் அந்த நிறுவனத்துக்கு நிதி ஆயோக் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் சிஇஓ அபிதாப் காந்த்கூறும்போது, “மின்சாரம் இல்லை.எந்த பாகமும் இறக்குமதி செய்யப்படவில்லை. எலெக்ட்ரானிக் பாகங்கள் எதுவுமில்லை. தேவையான அழுத்தத்தில் ஆக்சிஜன் வழங்கும் திறனுடன் இருக்கிறது. விலை ரூ.2500 மட்டுமே. இது முழுக்க முழுக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு. நெருக்கடி காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்று கூறினார்.
அதேசமயம் ஆப்கானிஸ்தானின் பிரைஸ் வின்னிங் ரோபாட்டிக் மாணவிகள் குழு ஆட்டோமொபைல் பாகங்களில் இருந்து வென்டிலேட்டர் ஒன்றை தயார் செய்துள்ளது. இது உலக சுகாதார மையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்னர் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.