கொரோனாவால் உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு (டபிள்யூஎஃப்பி) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிற்செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இதன் விளைவாக, கோடிக்கணக்கான பேர் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொடிய ஆபத்தான பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 26.5 கோடியாக உயரும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
‘‘தற்போதைய சூழலை எதிர்கொள்ள நாம் ஒன்றினைய வேண்டும். இல்லையென்றால் உலகம் பெரும் விலை கொடுக்க நேரிடும்.
மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவிப்பார்கள’’ என்று ஐ.நா-வின். உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இயக்குநருமான ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.