கட்சிச் செயலர்களுடனான இன்றைய சந்திப்பை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் என்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தில் கட்சிச் செயலர்களுடன், தேர்தல்கள் திணைக்கள தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை சந்திப்பை நடத்தினார்.
ஜூன் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கட்சிச் செயலர்கள் ஆட்சேபனை எழுப்பினர். கட்சிகளுடன் கலந்துரையாடாமல் தேர்தல் திகதியை நிர்ணயித்தமை தொடர்பில் ஆட்சேபம் வெளியிட்டனர்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், “நாட்டின் சுகாதார நிலைமைகளை ஆராய்ந்துதான் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும். ஜூன் 20ஆம் திகதியும் தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகமே” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தை மக்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று கட்சிச் செயலர்கள் கோரியதற்கு, ஆணைக்குழு தவிசாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.