வர்தா புயலின் சோகத்திலிருந்து மீளாத நிலையில் அடுத்து வரும் புயலுக்கு மாருதா என்று பெயர் பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான வர்தா புயலின் கோரத்தாண்டவத்திலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் அடுத்து இந்தியப் பெருங்கடலில் புயல் உருவாகவுள்ளது. இந்தப் புயலுக்கு இலங்கை மாருதா என்று பெயர் சூட்டியுள்ளது.
வட இந்தியப் பெருங்கடலின் பட்டியலில் முதலில் இந்தியா, பாகிஸ்தான் மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் புயலுக்கு பெரும் சூட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டில் ஒவ்வொரு நாடும், தலா 8 வீதம் இதுவரை 64 புயல்களை பதிவு செய்துள்ளன. இதில் 46 புயல்களின் பெயர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு ஆங்கில வரிசைப்படி வரும் நாடுகள் தான் முதலில் பெயர் சூட்டும். அதன்படி முதலில் வரும் பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும். அதன் பிறகு வரும் இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் வழங்கைய பெயர் வைக்கப்படும். கடந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உருவான கடைசி புயலுக்கு இந்தியா வழங்கிய மேக் என்ற மேகம் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு மாலத்தீவு வைத்த ரோனு என்ற பெயர் சூட்டப்பட்டது.
அதே போல் வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான புயலுக்கு மியான்மர் கியாண்ட் என்று பெயர் சூட்டியது. இந்தப் புயல் மியான்மரை தாக்கியது.
கடந்த மாதம் உருவான நடா புயலுக்கு ஓமன் பெயர் சூட்டியது. தற்போது சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு பாகிஸ்தான் பெயர் சூட்டியது. இந்தப் புயல் கடந்த 6ம் தேதி உருவாகி 12ம் தேதி கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலில் விரைவில் புயல் ஒன்று உருவாக உள்ளது. இந்தப் புயலுக்கு இலங்கை மாருதா என்று பெயர் தேர்வு செய்துள்ளது.