சிறுவர்கள் கொரோனா பரவுவதற்கு காரணமாக அமைந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி பலரது மனதிலும் இருந்துகொண்டே இருந்த நிலையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவனது அனுபவம் இந்த கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது.
கிழக்கு பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஒன்பது வயது சிறுவன் ஒருவன் மூன்று பனிச்சறுக்கு பள்ளிகளுக்கு சென்றுள்ள நிலையில், சிறுவர்களிடமிருந்து கொரோனா பெரிய அளவில் பரவுவதில்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரான்சின் Haute-Savoie பகுதியில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஒரு பிரித்தானியர் பனிச்சறுக்கு விளையாடச் சென்று 12 பேருக்கு கொரோனாவை பரப்பினாரே, அதே நேரத்தில் இந்த சிறுவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
அந்த சிறுவன் தனக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரியாமலே மூன்று பனிச்சறுக்கு கிளப்களுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்திருக்கிறான்.
குறைந்த அளவு அறிகுறிகளே இருந்த நிலையில், அந்த சிறுவன் 172 பேருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த 172 பேரையும் கண்டுபிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதமாக, அந்த சிறுவனின் உடன் பிறந்தோர் உட்பட ஒருவருக்குக் கூட அவனிடமிருந்து கொரோனா பரவியிருக்கவில்லை.
இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள், இந்த சிறுவனின் விடயத்திலிருந்து, கொரோனாவை பரப்புவதில் சிறுவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.