இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 56,000 கனேடிய டொலர்களை (சுமார் ரூ. 7.5 மில்லியன்) நிதியுதவி வழங்கியுள்ளது.
உள்ளுர் முயற்சிகளுக்கான கனடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியின் கொவிட்-19 செயலணியின் சிவில் சமூகக் குழுவின் ஒரு அங்கமாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை உள்ளது.
மாவட்ட மட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான குழுக்கள் உள்ளடங்கலாக, நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட வலையமைப்புடன், நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் உலர் உணவுப் பொதிகளை தேசிய சமாதானப் பேரவை வழங்கும்.
பெரும்பாலானோருக்கு முடக்கம் மற்றும் 24 மணி நேர ஊரடங்கு என்பன பெரும் சவாலாகியுள்ள நிலையில், உதவி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு தேசிய சமாதானப் பேரவை உதவி வழங்கும்.
முன்னெப்போதும் இடம்பெற்றிராத இந்த உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிப்பதில் இலங்கையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களின் முயற்சியால் நான் ஈர்க்கப்பட்டதாக இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.
இந்த நோயையும் அதன் கடுமையான பொருளாதார தாக்கங்களையும் எதிர்த்துப் போராடும்போது இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, கனடாவின் ஆதரவின் மூலம் உதவ எதிர்பார்க்கின்றோம்.
பல்வேறு சமூகங்களுடனும், நாடு முழுவதும் அடையாளங் காணப்பட்ட தேவைக்கு விரைவாக பதிலளிப்பதற்கு தேசிய சமாதானப் பேரவையுடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பதிலளிப்பாக, மற்றும் சமூகத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்பல் மற்றும் இன மற்றும் மத குழுக்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்தும் தமது பணிநோக்கத்தினைத் தொடர்வதற்கு,
நாடு முழுவதிலும் உள்ள பங்காளர் வலையமைப்பு மற்றும் அரச அதிகாரிகளினால் அடையாளங் காணப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதன் மூலம் நெருக்கடி தணித்தல் இடையீடுகளில் தேசிய சமாதானப் பேரவை ஈடுபடும்.
மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கைவிடப்பட்டோர் இல்லங்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களும் இதில் உள்ளடங்கும்.
மக்கள், இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் இந்த நேரத்தில் ஒற்றுமைக்கான தேவையுள்ளது.
கனடாவின் உதவியுடன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கான இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இன மற்றும் மத பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனவும், எதிர்கால ஒருங்கிணைப்பை அது ஊக்குவிக்கும் தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.
எப்போதும் போல, கனடா ஒரு வளமான, உள்ளடக்கமான மற்றும் ஆரோக்கியமான இலங்கைக்காக உள்ளுர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறது.