தந்தையினால் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 17 வயதான யுவதி தெரிவித்துள்ளமை பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த யுவதி வழங்கிய வாக்கு மூலத்துக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி பிரதேச தோட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கொழும்புக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டமையினால் ஊருக்கு வரமுடியாமல் சிரமப்பட்டிருந்த நிலையில் குறித்த யுவதி நேற்று முன்தினம் நாவலப்பிட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்
தற்போது நாட்டில் கொரோனா அச்சம் நிலவி வருவதனால் மேற்படி யுவதி ஊருக்கு வந்த விடயம் குறித்து பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பொது சுகாதார பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த யுவதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் முகமாக பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே கடந்த 2017 ஆண்டு தான் 14 வயது சிறுமியாக இருந்தபோது தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் தனது தந்தையினால் வலுக்கட்டாயமாக தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
அன்றிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வீட்டில் வைத்தும் வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றும் தந்தை தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கொழும்பில் தங்கியிருப்பதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.