தமிழகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக அவர் கணவரே அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்வாய் கண்டிகை கிராமத்தில் வசித்து வந்தவர் கார்த்திக்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கும் 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுனிதா வீட்டில் பிணமாக தொங்கினார். இதனால் கார்த்திக் குடும்பத்தினர், உடனடியாக சுனிதா வீட்டுக்கு போன் செய்து, சுனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், கார்த்திக் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு சுனிதாவின் உடல் தூக்கு கயிறிலிருந்து இறக்கப்பட்டு, தரையில் கிடத்தப்பட்டிருந்தது.
அப்போதுதான் மகளின் தலையில் ரத்த காயம் இருப்பதை கண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், உடனடியாக பொலிசில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தந்தனர். இது வரதட்சணை பிரச்சனைக்காக ஏற்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதையடுத்து பொலிசார் சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் சுனிதாவின் மரணம் தற்கொலை இல்லை, கொலை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை பொலிசார் வலைவீசி தேடி கைது செய்தனர்.
விசாரணையில், அடிக்கடி வரதட்சணை கேட்டு கார்த்திக் டார்ச்சர் செய்தது வந்ததும், சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு இதே பிரச்சனையை கார்த்திக் எழுப்பியதாகவும் தெரிகிறது.
தகராறு முற்றியதையடுத்து, ஆவேசம் அடைந்து கார்த்திக் சுனிதாவை அடித்தே கொன்று, தூக்கிலும் தொங்க விட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.