தலை சுற்றல்…
ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று.
இது ஏன் ஏற்படுகிறது? இதன் பாதிப்பு என்னவாக இருக்கும்? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் ஒரு சக்கரம் போல் சுழல்வதாக உணர்வார்கள்.
வாந்தி வருவது போல இருக்கும். நடப்பதிலும் தள்ளாட்டம் காணப்படும். நிற்பதிலும் சிரமமாக இருக்கும்.
இதனை மருத்துவத்தில் வெர்டிக்கோ என்று கூறுவார்கள். வெர்டிக்கோவில் வெர்டோ என்ற சொல் லத்தீன் மொழியாகும். இதற்கு கிறக்கம் என்று பொருள். சுற்றுவது, சுழல்வது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்நோய் பாதித்தவர்கள் முதலில் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதாக கூறுவர். இரண்டாவது நிலையில் தானே சுற்றுவதாகவும், தன்னோடு தலையும் சேர்ந்து சுழல்வதாக தெரிவிப்பர். இந்நோய் சுமார் 20 முதல் 30 சதவீதம் மக்களை பாதித்துள்ளது. அனைத்து வயது ஆண்களும், பெண்களும் இந்நோய்க்கு ஆளாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். உள்காது நரம்பு மண்டலத்தால் வரும் தலைசுற்றலை பெரிபெரல் வெர்டிகோ என்று கூறுவார்கள்.
மனிதனின் உள்காதில் வட்டவடிவத்தில் கால்வாய் போன்ற பாதைகள் உள்ளன. இது சிறு குகைப்போல காணப்படும். இங்கிருந்து 8-வது நரம்பு வருகிறது. இதில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வரும் தலைசுற்றல் தான் பெரிபெரல் தலைசுற்று என்று அழைக்கப்படுகிறது.
மிக கடுமையான ஜலதோஷத்தில் இருந்து விடுபட்டவருக்கு இந்த தலைசுற்றல் வரலாம். சில மருந்துகள் காரணமாகவும் தலைசுற்றல் வர வாய்ப்பு உள்ளது. தலையில் அடிபடுவது, பிரயாணம் போன்றவற்றாலும் தலைசுற்றல் வரலாம். அப்போது காதில் கேட்கும் திறன் குறைந்தது போல இருக்கும். வாந்தியும், வலியும் ஏற்படும். முகத்திலும் பலவீனம் தெரியும்.
இது போல நரம்பு மண்டலத்தில் சிறுமூளை பாதிக்கப்படுவதாலும் தலைசுற்றல் வரும். இவ்வாறு தலைசுற்றல் வருபவர்களுக்கு பேச்சு குழறும், எதிரில் உள்ள பொருட்கள் இரண்டு இரண்டாக தெரியும். கண் அசைதல், நேர் கோட்டில் நடப்பதில் சிரமம், ஒரே இடத்தில் நிற்கவும் முடியாத நிலை போன்றவை ஏற்படும். பக்கவாதம், மூளைக்கு செல்லும் ரத்தஓட்டகுறைவு, மூளையில் கட்டிகள், ரத்த கசிவு, கழுத்தெலும்பு கட்டிகள், தண்டுவட நோய்கள், கழுத்தெலும்பு தேய்மானம் போன்றவற்றாலும் தலைசுற்றல் ஏற்படும். இதனை குணப்படுத்த நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் வந்துள்ளன.
ஆயுர்வேதத்தில் வாத, பித்தங்களை சார்ந்து இந்நோய் வருவதாக நம்பப்படுகிறது. உடலில் காது தான் வாதத்தின் இருப்பிடமாகும். இங்கு வாத பித்தம் அதிகரிக்கும் போது தலைசுற்றல் ஏற்படுகிறது. வாத பித்தத்தை தணிக்கும் இனிப்பு குணமுடைய, நெய்ப்பு தன்மை கொண்ட மருந்துகளை உட்கொண்டால் நோய் குணமாகும்.
படுக்கையில் இருந்து எழும்போது கழுத்தை திடீரென்று திருப்பாமல் மெதுவாக அசைத்து திருப்ப வேண்டும். நடக்கும் போது மெதுவாக நடக்க வேண்டும்.
பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தலைசுற்றலால் வாயில் கசப்பு அல்லது புளிப்பு ருசியும், புளித்த ஏப்பமும், வயிற்று உப்புசமும் ஏற்படலாம். கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படும். தூக்கமும் சரியாக வராது. இந்த வகை தலைசுற்றலுக்கு கருமிளகு அல்லது வெள்ளை மிளகு அல்லது வெந்தயத்தை பாலில் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து மேலும் வதக்கி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2 லிருந்து 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் குறையும். இதற்கு சிதார்த்ரக பிரயோகம் என்று பெயர். அஜீரணத்தால் வரும் தலைச் சுற்லுக்கு சுக்கு, மல்லிவிதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.
தலைசுற்றல், மயக்கம் வீட்டு மருந்துகள் :
கசகசா, கொத்தமல்லி, பருத்தி விதை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவது குறையும்.
வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கபட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நல்லெண்ணையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் நீங்கும்.
நெல்லிவற்றல், சந்தனத்தூள், மல்லி விதை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு குறையும். மல்லி விதை 5 கிராம், உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள் 5 கிராம் ஆகிறவற்றை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து பருக வேண்டும். கொத்தமல்லி சாறும் நல்லது. இதனுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறும் நல்ல மருந்தாகும்.
தலைசுற்றலை போக்கும் இஞ்சி வடகம்
பால்முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட விதார்யாதி கசாயம் தலைசுற்றலுக்கு சிறந்த மருந்தாகும். திராட்சாதி குடிநீர், நன்னாரி, வெண்தாமரை குடிநீர் போன்றவையும் சிறந்த மருந்தாகும். பேரீச்சை லேகியம், நன்னாரி மணப்பாகு ஆகியவற்றை காலையிலும் மாலையிலும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.
முசு முசுக்கை கசாயத்தில் இஞ்சி வடகத்தை சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட தலை சுற்றலும் தீரும்.
இஞ்சி லேகியம், சீரக சூரணம் இதற்கு சிறந்த மருந்தாகும். மல்லி சூரணமும் பயன்படுத்துவார்கள். வாதபித்தத்தை தணிக்கிற தைலங்களான அதிமதுரத் தைலம், வாதாசின் தைலம், நாராயண தைலம், கீழா நெல்லி தைலம், சீரக தைலம் போன்ற தைலங்களை தலைக்கு தேய்த்து குளிக்கலாம். ஆறு காலாதி தைலமும் தலைக்கு நல்லது.
வெண்தாமரை பால் கசாயம் மிகவும் சிறந்தது. இரவு உறங்கும் முன் சாரஸ்வதகிருதம், வாணி கிருதம், கல்யாணக கிருதம், மகாதிக்தக கிருதம், நெல்லிக்காய் கிருதம், சந்தனாதி கிருதம் போன்ற கிருதங்களை சேர்த்து சாப்பிடலாம். மூக்கின் வழியாக மருந்துகளை செலுத்துகிற நஸ்யம் சிகிச்சை மூலமும் இதற்கு நிவாரணம் கிடைக்கும். வில்வ இலைகளை மென்று சாப்பிட்டாலும் தலைச்சுற்றல் குறையும்.